கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 9.30 மணிக்கு அவர் இறந்ததாக அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பின்னர் தாம் வெளியிட்ட செய்திக்கு முரணாக அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்தது.
தாங்கள் வெளியிட்ட செய்தியை மாற்றுமாறு அரசு ஊடகங்களுக்கு சீன அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக லீ வெண்லியாங் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊடகத்தினர் பிபிசி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் யாரும் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.
பின்னர் அவர் வெள்ளிக்கிழமை காலை 2:58 மணிக்கு இறந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
- கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
- கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்
கோபமாக மாறிய சோகம்
முதலில் சோகத்தைத் தூண்டிய அவரது மரணச் செய்தி இப்போது மக்களிடையே, அரசு மீதான கோபமாக மாறியுள்ளது.
'வுஹான் அரசு லீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்', 'எங்களுக்கு கருத்துரிமைக்கான சுதந்திரம் வேண்டும்' என்று பொருள்படும் ஹேஷ்டேகுகள் சமூக ஊடங்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
எனினும் இந்த ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான பதிவுகளை சீன அரசு நீக்கியுள்ளது. இப்போது மிகச்சில பதிவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
"இது எச்சரிக்கை விடுத்த ஒருவரின் மரணம் அல்ல; நாயகன் ஒருவரின் மரணம்," என்கிறது ஒரு வெய்போ பதிவு.
யார் இந்த லீ வெண்லியாங்?
லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சென்ற டிசம்பர் மாதமே அவர் சக மருத்துவர்களிடம் புதிய வைரஸ் பரவல் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், இவ்வாறு போலியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி அவரை விசாரணை செய்த சீன போலீஸார் கூறியுள்ளனர்.
பின்னர் வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிரமாக இறங்கிய சீன அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.