புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரை நள்ளிரவில் சிறைபிடித்த மாணவர்கள்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் கல்வி கட்டணம் மேலும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.


பல்கலைக்கழகத்திற்கு வரும் உள்ளூர் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை கடந்த ஆண்டு முன்பு வரை செய்யப்பட்டு வந்த நிலையில், 2019-20ஆம் கல்வி ஆ‌ண்டு முதல் பல்கலைக்கழக பேருந்தில் பயணம் செய்ய ஆண்டிற்கு 8000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.


இந்த இரு கட்டணங்களையும் திரும்பபெற வலியுறுத்தியும், புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.


இதுதொடர்பாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை அமைப்பின் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துணைவேந்தர் அழைப்புவிடுத்தார். அதனை தொடர்ந்து துணை வேந்தருடன் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் மாணவர்கள் துணை வேந்தர் அலுவலகத்தை, வியாழன் - வெள்ளி கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் முற்றுகையிட்டு அவரை வெளியே செல்ல விடாமல் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக அறையிலே முடக்கப்பட்டார்.



துணைவேந்தரை வெளியே அழைத்து செல்ல நள்ளிரவில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் துணைவேந்தர் குர்மீத் சிங் வெளியே அழைத்து செல்லப்பட்டார்.


பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.